ஆன்மீக வளர்ச்சி (#11243)

என் இறைவா, உமது நித்தியம் என்னும் இனிய நறுமணமிகு நீரோடையிலிருந்து என்னைப் பருகச் செய்வீராக. என் நம்பிக்கையே, உமது மெய்நிலை என்னும் விருட்சத்தின் கனிகளைச் சுவைத்திட எனக்கு உதவுவீராக; எந்தன் பேரொளியே! உந்தன் அன்பு என்னும் தெளிவான நீரூற்றிலிருந்து என்னை அருந்திடச் செய்வீராக. எந்தன் பிரகாசமே! உமது நித்திய அருள்பாலிப்பு என்னும் நிழலின்கீழ் என்னை வசித்திடச் செய்வீராக. எந்தன் நேசரே! உமது அருகாமை என்னும் பசும்புல்வெளிகளில், உமது முன்னிலையில், என்னை நடமாடச் செய்வீராக. எனதாவலே! உமது கருணை என்னும் அரியாசனத்தின் வலப்பக்கத்தில் என்னை அமரச் செய்வீராக. எந்தன் குறிக்கோளே! உமது மணங்கமழ் மகிழ்ச்சி என்னும் இளங்காற்றுகளில் ஒன்றினை என்மீது வீசிடச் செய்வீராக. எந்தன் வழிப்பாட்டிற்குரியவரே! உமது மெய்ம்மை என்னும் சுவர்க்கத்தின் உச்சங்களினுள் என்னைப் பிரவேசிக்கச் செய்வீராக. பிரகாசமிக்கவரே! என்னை உமது ஒருமைத் தன்மை என்னும் புறாவின் கீதங்களைச் செவிமடுக்கச் செய்வீராக. எந்தன் அருளாளரே! உமது ஆற்றல், வல்லமை என்னும் உயிர்ப்புச் சக்தியின் மூலம் என்னைத் துரிதப்படுத்துவீராக. எந்தன் ஆதரவாளரே! உமது அன்பு என்னும் உயிர்ப்புச் சக்தியினில் என்னை உறுதியுடன் இருக்கச் செய்வீராக. என்னை ஆக்கியோனே! உமது நல்விருப்பம் என்னும் பாதையில் என் காலடிகளை வலுப்படுத்துவீராக. என்பால் கருணையுடையவரே! உந்தன் இறவாமை என்னும் பூங்காவினில், உமது வதனத்தின் முன், என்னை என்றென்றும் உறைந்திடச் செய்வீராக. என்னை உடைமையாகக் கொண்டுள்ளவரே, உமது மகிமை என்னும் இருக்கையின் மீது என்னை நிலைபெறச் செய்வீராக. என்னைத் துரிதப்படுத்துபவரே! உமது அன்புப் பரிவு என்னும் விண்ணுலகின்பால் என்னை உயர்த்துவீராக; என்னை ஈர்ப்பவரே! உமது வழிக்காட்டல் என்னும் பகல் நட்சத்திரத்தின்பால் என்னை வழிநடத்துவீராக! எனது மூலமுதலும் அதிவுயர்  விருப்பமும் ஆனவரே! உமது கண்களுக்குப்-புலனாகா ஆவியின் வெளிப்பாடுகளுக்கு முன்னால் என்னைப் பிரசன்னமாகிட அழைப்பாணை   விடுப்பீராக.  என்  இறைவனானவரே, நீர் வெளிப்படுத்தவிருக்கும் உமது அழகு என்னும் நறுமணத்தின் சாரத்தின்பால் என்னைத் திரும்பி வந்திடச் செய்வீராக! 

தான் விரும்பியதைச் செய்யும் ஆற்றலுடையவர் நீரே ஆவீர். மெய்யாகவே, நீரே அதி மேன்மைமிக்கவர், ஒளிமயமானவர், அதி உயர்வானவர்.

-Bahá'u'lláh
-----------------------

ஆன்மீக வளர்ச்சி (#11244)

என் கடவுளே, என்னில் ஒரு தூய உள்ளத்தை உண்டாக்குவீராக. என் நம்பிக்கையே! என்னுள் ஒரு சாந்தமான மனசாட்சியைப் புதுப்பிப்பீராக. என் அதி நேசரே! சக்தியின் ஆவியின் வழி உமது மார்க்கத்தில் என்னை உறுதிப்படுத்துவீராக. எனது ஆவலின் நோக்கமே! உமது ஒளியின் பிரகாசத்தின் வழி எனக்கு உமது வழியை வெளிப்படுத்துவீராக. என் உயிரின் பிறப்பிடமே, உமது உன்னத சக்தியால், என்னை உமது புனிதத் தெய்வீகத் தன்மைக்கு உயர்த்துவீராக. என் இறைவன் ஆனவரே! உமது நித்தியம் எனும் தென்றலினால் என்னை மகிழ்விப்பீராக. என் தோழரே, உமது நித்திய கானங்கள் என் மீது அமைதியை ஊதி அருளுமாக, என் பிரபுவே, உமது ஆதி வதனத்தின் செல்வங்கள் என்னை  உம்மைத் தவிர  மற்றெல்லா- வற்றிலிருந்தும் மீட்டருளுமாக; தெளிவான-வற்றுள் எல்லாம் அதி தெளிவானவரே, மறைவாய் உள்ளவற்றுள் எல்லாம் அதி மறைவாய் உள்ளவரே! உமது மாசுபடுத்திட இயலா வெளிப்படுத்துதலின் செய்திகள் எனக்கு மகிழ்ச்சி கொண்டு வருமாக.

-Bahá'u'lláh
-----------------------

ஆன்மீக வளர்ச்சி (#11245)

கிருபையாளரும், சர்வ வல்லவரும் அவரே! கடவுளே, என் கடவுளே! உமது  அழைப்புக்குரல் என்னைக் கவர்ந்துள்ளது; உமது பேரொளி எனும் எழுதுகோலின் குரல் என்னைத் தட்டியெழுப்பியுள்ளது.  உமது புனித சொற்கள் எனும் ஓடை என்னை மெய்ம்மறக்கச் செய்துள்ளது; உமது அகத் தூண்டல் எனும் மதுரசம் என்னைப் பரவசப்படுத்தியுள்ளது. பிரபுவே, உம்மைத் தவிர மற்றனைத்திலிருந்தும் நான் பற்றறுத்தும், உமது அருட்கொடை எனும் கயிற்றினைப் பற்றிக்கொண்டும், உமது கிருபை எனும் அற்புதங்களுக்காக ஏங்குவதையும் நீர் காண்கின்றீர்.  உமது அன்புக் கருணை எனும் நித்தியப் பேரலைகளினாலும், உமது கனிவான பாதுகாப்பு, தயை எனும் பிரகாசமான ஒளிகளினாலும், உந்தன்பால் என்னை நெருங்கச் செய்யக்கூடியவற்றையும், உமது செல்வத்தில் என்னைச் செல்வந்தராக ஆக்கக்கூடியவற்றையும் எனக்கு அருளுமாறு நான் உம்மை வேண்டுகிறேன்.  எனது நா, எனது எழுதுகோல், எனது முழு உயிருரு ஆகிய அனைத்தும், உமது சக்தி, உமது வலிமை, உமது கிருபை, உமது அருட்கொடை ஆகியவற்றுக்கும், நீரே கடவுள் எனவும், சக்தி-மிக்கவரும், வல்லவருமான கடவுள் உம்மைத் தவிர வேறிலர் என்பதற்கும் சாட்சியம் பகர்கின்றன.

என் கடவுளே, இத்தருணம், எனது  ஆதரவற்ற நிலைக்கும், உமது அரசாட்சிக்கும், எனது  வலுவற்ற நிலைக்கும் உமது சக்திக்கும் நான் சாட்சியம் பகர்கின்றேன்.  எவை எனக்கு நன்மை தரக்-கூடியவை, அல்லது தீமை தரக்கூடியவை என்பதை  என்னால் அறிந்திட இயலவில்லை. மெய்யாகவே, சர்வமும்  அறிந்தவரும், சர்வ விவேகியும் நீரே ஆவீர்.  பிரபுவே, எனதாண்டவரே, உமது  நித்திய ஆணையைக் கொண்டு, என்னை மனநிறைவு அடையச் செய்யக் கூடியவற்றையும், உமது  எல்லா உலகங்களிலும் என்னைச் செழிப்படையச் செய்யக்கூடியவற்றையும் எனக்காக ஆணையிடுவீராக. உண்மையாகவே, கருணை-மிக்கவரும், வள்ளன்மைமிக்கவரும் நீரே ஆவீர்.

பிரபுவே, உமது செல்வம் எனும் சமுத்திரத்திலிருந்தும், உமது  கருணை எனும் சொர்க்கத்திலிருந்தும் என்னைத் துரத்திவிடாதீர்; இம்மையிலும் மறுமையிலும் உள்ள நன்மைகளை எனக்கு விதித்திடுவீராக; மெய்யாகவே அதி உயர்வில் அமைக்கப்பட்டுள்ள, கருணை எனும் இருக்கைக்குப் பிரபு நீரே ஆவீர்; ஏகமானவரும், சர்வமும் அறிந்தவரும், சர்வ விவேகியுமான உம்மைத்  தவிர, வேறு கடவுள் இலர்.

-Bahá'u'lláh
-----------------------

ஆன்மீக வளர்ச்சி (#11246)

என் பிரபுவே! உந்தன் அழகையே என் உணவாகவும், உந்தன் பிரசன்னத்தையே என் பானமாகவும், உந்தன் மகிழ்ச்சியையே என் நம்பிக்கையாகவும், உம்மைப் புகழ்வதையே என் செயலாகவும், உம்மை நினைத்தலையே என் தோழனாகவும், உந்தன் இறைமை சக்தியையே என் உதவியாகவும், உந்தன் வாசஸ்தலமே என் இல்லமாகவும், உம்மிடமிருந்து ஒரு திரையைப் போன்று, மறைக்கப்பட்டோருக்கு விதிக்கப்பட்ட வரையறைகளிலிருந்து நீர் புனிதப்படுத்தியுள்ள ஆசனத்தை என் இருப்பிடமாகவும் ஆக்கிடுவீராக.

மெய்யாகவே, சர்வ வல்லவரும், சர்வ  ஒளிமிக்கவரும், அதி சக்திமிக்கவரும் நீரே ஆவீர்.

-Bahá'u'lláh
-----------------------

ஆன்மீக வளர்ச்சி (#11247)

பிரபுவே, எனதாண்டவரே, உந்தன் நாமம் போற்றப்டுவதாக! உமது மென்கருணை எனும் கயிற்றைப் பிடித்துக் கொண்டும், உமது வள்ளன்மை எனும் அங்கியினைப் பற்றிக்கொண்டுமுள்ள உமது ஊழியன் நானே. அருவமும், உருவமுமான, எல்லாப் படைப்புப் பொருள்களையும் நீர் வசப்படுத்தி, எதன் மூலமாக உயிர் மூச்சாகவே இருக்கும் சுவாசமானது, படைப்பு முழுவதன் மீதும் வீசப்பட்டுள்ளதோ, அந்த உமது திருநாமத்தினால்; விண்ணுலகங்களையும் பூமியையும் சூழ்ந்துள்ள உமது  சக்தியைக் கொண்டு என்னைப் பலப்படுத்துமாறும், எல்லா நோய்களிலிருந்தும், பேரிடர்களிலிருந்தும் என்னைக் காத்தருளுமாறும் நான் உம்மிடம்  மன்றாடுகிறேன்.  எல்லா நாமங்களுக்கும் நீரே பிரபு என்றும், உமக்கு விருப்பமான எல்லாவற்றையும்   விதித்திடுபவர்  நீரே என்றும் நான் சாட்சியம் அளிக்கின்றேன்.  வல்லவரும், எல்லாம் அறிந்தவரும், சர்வ விவேகியுமான  கடவுள்  உம்மைத் தவிர வேறிலர்.

என் பிரபுவே, உமது  உலகங்கள் ஒவ்வொன்றிலும் எனக்கு நன்மை பயப்பனவற்றை எனக்கு விதித்தருள்வீராக.  ஆகையால், பழி சுமத்துவோனின் பழிப்போ, நாஸ்திகனின் இரைச்சலோ, உம்மிடமிருந்து விலகிச் சென்றோரின் பேதமோ, உந்தன்பால்  திரும்புவதிலிருந்து தடுத்திடா-தோரான  உமது  உயிரினங்கள் மத்தியில் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கென நீர்  எழுதியுள்ள-வற்றை எனக்கும் வழங்கிடுவீராக. 

உண்மையாகவே, உமது  அரசாட்சி எனும் சக்தியைக் கொண்டு ஆபத்தில் உதவுபவர் நீரே ஆவீர். வல்லவரும், அதி சக்திமிக்கவருமான, உம்மைத் தவிர வேறு கடவுள் இலர்.

-Bahá'u'lláh
-----------------------

ஆன்மீக வளர்ச்சி (#11248)

என் கடவுளே, வள்ளன்மை, கருணை, ஆகியவற்றின் கடவுளே! எவரது கட்டளையிடும் வார்த்தையின் வாயிலாகப் படைப்பு முழுமையும் உருவாக்கப்பட்டதோ, அவ்வார்த்தையின் மன்னர் நீரே ஆவீர்; எவரது ஊழியர்களின் செயல்கள், தம் கிருபையைக் காட்டுவதிலிருந்து அவரை என்றுமே தடுத்ததில்லையோ, தம் அருட்கொடையின் வெளிப்பாடுகளைத் தடை செய்ததில்லையோ, அவற்றின் சர்வ வள்ளன்மை மிக்கவர் நீரே  ஆவீர்.

உமது உலகங்கள் ஒவ்வொன்றிலும், அவனது மீட்புக்குக்      காரணமாக இருந்துள்ளவற்றை   இவ்வூழியனை அடையச் செய்யுமாறு நான் உம்மிடம் மன்றாடுகிறேன். மெய்யாகவே, வல்லவரும், அதி சக்திமிக்கவரும், சகலத்தையும்  அறிந்தவரும், சர்வ விவேகியும் நீரே ஆவீர்.

-Bahá'u'lláh
-----------------------

ஆன்மீக வளர்ச்சி (#11249)

பிரார்த்தனைகளைச் செவிமடுத்திடும், பிரார்த்தனைகளுக்குப் பதிலளித்திடும் கடவுள் அவரே!

இறையன்பரே, உலகுக்கு ஒளி வழங்குபவரே, உமது மேன்மையினால்!  பிரிவெனும் தீப்பிழம்புகள் என்னை இரையாக்கிக் கொண்டன; எனது வழிதவறல், என்னுள்ளே எனது இதயத்தை உருகச் செய்துள்ளது.  உலகின் ஆவலும், மனுக்குலத்தின் நல்லன்பருமானவரே, உமது  அகத்தூண்டல் எனும் இளந்தென்றல் எனது ஆன்மாவை ஊக்குவித்தும், உமது  அற்புத குரலோசை, எனது செவிகளை அடைந்திடவும், உமது நாமங்கள், உம்முடையத் தன்மைகள், ஆகியவற்றின் அவதரிப்புகளில் வெளிப்படுத்தப்பட்ட உமது  அடையாளங்களையும் உமது  ஒளியையும்  எனது கண்கள் கண்ணுற்றிடவும்  அருளுமாறு, உமது அதிவுயரிய நாமத்தினால், அனைத்துப் பொருள்களையும் உமது பிடிக்குள் வைத்திருப்பவரான உம்மை நான் வேண்டிக் கேட்கிறேன்.

பிரபுவே, எனதாண்டவரே, உம்மிடமிருந்து அவர்கள் பிரிந்ததன் காரணத்தால்,  உந்தன் ஆதரவைப் பெற்றவர்களால் சிந்தப்படும்  கண்ணீரையும், உந்தன் புனித அரசவையிலிருந்து வெகுதூரத்தில்  இருப்பதனால் ஏற்படுகின்ற, உமது பக்திக்கொண்டோரின் அச்சங்களையும் நீர் காண்கின்றீர். புலனாகும், புலனாகா அனைத்துப் பொருள்களையும் அசையச் செய்திடும் உமது சக்தியினால்!  உலகிலுள்ள துஷ்டர்கள், கொடுமையாளர்கள் ஆகியோரின் கரங்களால் விசுவாசிகளுக்கு நேர்ந்துள்ளவற்றுக்காக, உமது அன்புக்குரியவர்கள் இரத்தக் கண்ணீர் சிந்துவது அவர்களின் கடமையாகும். என் கடவுளே, இறை பக்தியற்றோர் உமது நகரங்களையும், உமது  சாம்ராஜ்யங்களையும் எவ்வாறு சூழ்ந்துள்ளனர் என்பதை நீர்  காண்கின்றீர்! உமது  தூதர்கள், உம்மால்  தேர்ந்தெடுக்கப்பட்டோர், மற்றும் உமது  ஊழியர்களின் மத்தியில், உந்தன் தெய்வீக ஒற்றுமை எனும் விருதுக்கொடியை  ஊன்றியவர் ஆகியோரை, உமது  அருட்கொடையைக் கொண்டு அவர்களைப் பாதுகாக்குமாறு, நான் உம்மை வேண்டிக் கேட்கிறேன். மெய்யாகவே, கருணை மிக்கவரும், அதிதாராளமானவரும் நீரே ஆவீர்.

மேலும், உமது கிருபை எனும் இனிய பொழிவுகள், உமது  தயை எனும் சமுத்திரத்தின் பெரும் அலைகள் ஆகியவற்றின் பெயராலும், அவர்களின் கண்களுக்கு ஆறுதல் தரக்கூடியவற்றையும், அவர்களின் இதயங்களுக்கு  அமைதியைத் தரக்கூடியவற்றையும் விதித்- தருளுமாறு நான் மீண்டும் உம்மை  வேண்டிக் கேட்கிறேன்.  பிரபுவே! மண்டியிட்டு வணங்குபவன் எழுந்து, உமக்குச் சேவையாற்றிட ஏங்குவதையும்; மாண்டோர்,  உமது  தயை  எனும்  சமுத்திரத்திலிருந்து நித்திய வாழ்வுக்காகவும், உமது செல்வம் எனும் வானங்களில் உயரப் பறப்பதற்காகவும்  குரல் எழுப்புவதையும்; அயலான், உமது கிருபை எனும் விதானத்தின் கீழ் அவனது புகழொளி எனும் புகலிடத்திற்காக ஏங்குவதையும்; தேடுபவன், உமது  கருணையினால், உந்தன் அருட்கொடை எனும் வாசலை நோக்கி விரைவதையும்; பாவிகள், மன்னிப்பு, பிழைபொறுத்தல் எனும் சமுத்திரத்தை நோக்கித் திரும்புவதையும் நீர் காண்கின்றீர்.

மனிதர்கள் இதயங்களில் போற்றப்படுபவரே, உமது அரசாட்சியினால்!  உமது புனித விருப்பம், மகிழ்ச்சி ஆகியவை என்னுள்ளே  ஆட்சி செய்து, உமது  நித்தியக் கட்டளை எனும் எழுதுகோல் எனக்காக விதித்துள்ளவற்றுக்குப் பொருந்திய-வாறு என்னை இயக்கிடக் கூடும் என்பதற்காக, எனது சொந்த விருப்பம், ஆசை ஆகியவற்றைக் கைவிட்டு விலகி, உந்தன்பால்  நான் திரும்பியுள்ளேன்.  பிரபுவே, ஆதரவற்றிருந்தாலும், இவ்வூழியன் உமது சக்தி எனும் விண்கோளத்தை நோக்கித் திரும்பியுள்ளான்; தாழ்த்தப்-பட்டிருந்தாலும், புகழொளி  எனும் பகலூற்றை நோக்கி விரைந்துள்ளான்; ஏழ்மையில் இருந்தாலும், உந்தன் கிருபை எனும் சமுத்திரத்திற்காக ஏங்கியுள்ளான். உமது  தயை, அருட்கொடை ஆகியவற்றினால், அவனைத் துரத்திவிடாதீர் என நான் மன்றாடுகிறேன். 

மெய்யாகவே, சர்வ  வல்லவரும், மன்னிப்பவரும், இரக்கமுடையவரும் நீரே ஆவீர்.

-Bahá'u'lláh
-----------------------

ஆன்மீக வளர்ச்சி (#11250)

பிரபுவே எனதாண்டவரே,  நீர் மகிமைப்படுத்தப்-படுவீராக! உமது  நாள்களில் என்னை உருவாக்கி, உமது  அன்பையும் அறிவையும் என்னுள் உட்புகுத்தியமைக்காக  உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்.  உம்முடன் அணுக்கமாக இருக்கும்  உமது  ஊழியர்களின் உள்ளங்களெனும் பொக்கிஷங்களிலிருந்து, உமது விவேகம், சொற்கள் ஆகிய நல்முத்துகள் வெளிக்கொணரப்பட்ட உமது நாமத்தின் பேராலும், இரக்கமுடையவர் எனும் உமது நாமமெனும் பகல் நட்சத்திரத்தின் மூலமாக, உமது சுவர்க்கம், உமது  பூமி  ஆகிய அனைத்தின் மீதும் அதன் பிரகாசத்தைப் பொழிந்திட்ட அந்நாமத்தினாலும்,  உமது  கிருபை, கொடை ஆகியவற்றின்  பேராலும்,  உமது   அற்புதமான-வையும், மறைவாய் உள்ளவையும் அருட்கொடை-களைத் தந்தருளுமாறு நான் உம்மிடம் இறைஞ்சுகின்றேன்.

என் கடவுளே, உமது சொந்த நாள்களோடு நீர்  இணைத்துள்ள என் வாழ்வின் ஆரம்ப நாள்கள் இவையே. நீர் என் மீது அத்துணைப் பெரும் மதிப்பை இப்போது  பொழிந்துள்ள காரணத்தால், உமது தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு நீர்  விதித்தருளியவற்றை  எனக்கும்  தரமறுத்து விடாதீர்.

என் கடவுளே, உமது அன்பெனும் நிலத்தில் விதைத்தும், உமது கொடை எனும் கரத்தினால் துளிர்விடச் செய்துமுள்ள ஒரு சிறு வித்துதான் நான்.  எனவே,  இவ்வித்து, அதன் மன ஆழத்தில், உமது  கருணை எனும் நீர்களுக்காகவும், உமது  கிருபை எனும் உயிரூற்றுக்காகவும் ஏங்குகிறது. உமதன்புக் கருணை எனும் சுவர்க்கத்திலிருந்து, உமது நிழலின் கீழும், உமது  அரசவையின்  எல்லைகளுக்குள்ளும் அது செழுமையாகிட  உதவக்கூடியவற்றை, அதன் மீது பொழிந்திடுவீராக.  உமது நிறைவான ஓடையிலிருந்தும், உந்தன் உயிர் நீர் எனும் ஊற்றுக்களிலிருந்தும், உம்மை   கண்டுணர்ந்த அனைவரின் இதயங்களிலும் நீர் பாய்ச்சுபவர் நீரே ஆவீர். 

உலகங்களுக்கெல்லாம் பிரபுவான இறைவன் போற்றப்படுவாராக.

-Bahá'u'lláh
-----------------------

ஆன்மீக வளர்ச்சி (#11251)

என் கடவுளே, யாவற்றுக்கும் மேலான பேரொளி எனும் உமது திருநாமத்தினால், உமது அன்புக்குரியவர்களை நீதி எனும் அங்கியினால்  அணிவித்து, அவர்களின் உயிருருவை நம்பிக்கைக்குப் பாத்திரமாய் இருத்தல் எனும் ஒளியால் ஒளிரச் செய்யுமாறு நான் உம்மை  இறைஞ்சுகிறேன்.  நீர் விரும்பியவாறு செய்யவல்ல சக்தியுள்ளவரும்; கண்ணுக்குப் புலனாகும், புலனாகா அனைத்துப் பொருள்களின் அதிகாரத்தை  உமது    பிடிக்குள்  வைத்திருப்பவரும் நீர் ஒருவர் மட்டுமே.

-Bahá'u'lláh
-----------------------

ஆன்மீக வளர்ச்சி (#11252)

என் கடவுளே, உமதன்பு, நல்விருப்பம் ஆகியவற்றின் முழு அளவினை எனக்குத் தந்தருள்வீராக; அதிவிழுமிய ஆதாரமும், சர்வ ஒளிமயமானவரும் ஆனவரே, உமது பிரகாசமிகு ஒளியின் ஈர்ப்புகளின் வாயிலாக, எங்கள் இதயங்களைப் பரவசமடையச் செய்திடுவீராக. கோடையின் பிரபுவே, பகல் வேளையிலும் இரவு காலத்திலும், உமது வலுவூட்டும் இளந்-தென்றல்களை, உமது கிருபையின் ஓர் சின்னமாக என் மீது பொழிந்திடுமாறு செய்திடுவீராக.

என் கடவுளே, உமது திருவதனத்தைக் கண்ணுறத் தகுதி பெறுவதற்கு நான் எந்த நற்செயலையுமே செய்ததில்லை; இவ்வுலகம் நிலைத்திருக்கும் வரை நான் வாழ்ந்திருந்தாலும், இச்சலுகைக்காகத் தகுதி பெறுவதற்கு நான் எச் செயலையும் சாதித்திடத்  தவறி விடுவேன் என, நான் நிச்சயமாக அறிவேன். ஏனெனில், உமது   கொடை என்னை வந்தடைந்தால் அன்றி, உமது  மென்கருணை என்னை ஊடுருவினால் அன்றி, உமது அன்பிறக்கம் என்னைச் சூழ்ந்திட்டால் அன்றி,  ஓர் ஊழியனின் ஸ்தானம் உமது புனித சந்நிதானத்தை நெருங்குவதற்கு என்றுமே தகுதியற்றதாகவே இருக்கும்.   உம்மைத்  தவிர வேறு கடவுள் இலர் என்பதற்குரியவரே, புகழ் எல்லாம் உமக்கே உரியதாகுக. உம்மை நெருங்கி உயர்ந்திடவும், உந்தன் அருகிலேயே வசித்திடும் பெருமையை வழங்கப்பெறுவதற்கும், உம்மோடு  மட்டுமே உரையாடுவதற்கும், கிருபைகூர்ந்து என்னை இயலச் செய்வீராக. உம்மைத் தவிர கடவுள் வேறிலர்.

மெய்யாகவே, ஓர் ஊழியன் மீது நீர் ஆசி வழங்கிட விரும்பினால், நீர் அவனது இதயம் எனும் இராஜ்யத்திலிருந்து, உம்மைப் பற்றியே சொல்வதையல்லாது மற்றெல்லாச் சொல்லையோ, நினைவையோ அழித்திடுவீர்; மேலும், உமது  வதனத்தின் முன், அவனது கரங்கள் அநீதியாக இழைத்திட்ட  காரியங்களின் காரணமாக, நீர் ஓர் ஊழியனுக்குத் தீங்கினை  விதித்திட்டால், அவன் அதில் தன்னைமறந்து ஈடுபடுவான் என்பதற்காகவும்,  உம்மைப்  பற்றி நினைப்பதையே மறந்து விடுவான் என்பதற்காகவும், இவ்வுலகம், மறுவுலகம் ஆகியவற்றின் நன்மைகளைக் கொண்டு நீர் அவனைச் சோதித்திடுவீர்.

-The Báb
-----------------------

ஆன்மீக வளர்ச்சி (#11253)

என் கடவுளே! என் கடவுளே! உமது   ஒருமையினை ஒப்புக்கொண்டமைக்காக என்னை உறுதிப்படுத்தி, உமது  தனித்தன்மையான சொல்லின்பால் என்னை ஈர்த்து, உமது  அன்பெனும் நெருப்பினால் என்னைத் தூண்டி, உம்மை   குறித்துரைப்பதிலும், உமது அன்பர்கள், பணிப்பெண்கள் ஆகியோரின் சேவையில் ஈடுபடுத்தியமைக்காகவும், புகழ் உமக்கே  உரித்தாகுக.

என் பிரபுவே, அடக்கமானவனாகவும், கர்வமற்ற-வனாகவும்  இருந்திட எனக்கு உதவிடுவீராக; அனைத்திலிருந்தும் நான் பற்றறுத்திடவும், உமது மகிமை எனும் அங்கியின் விளிம்பைப் பற்றிக்கொள்ளவும் எனக்குப் பலமளிப்பீராக; அதனால், எனதுள்ளம், உமது  அன்பினால் நிரப்பப்பட்டு, உலகம், அதன் பண்புகள் மீதான பற்றுகள் ஆகியவற்றின்பாலான அன்பு எதற்கும் இடந்தராதிருக்கக் கூடும்.

கடவுளே! உம்மைத் தவிர மற்றெல்லா-வற்றிலிருந்தும் என்னைப் புனிதப்- படுத்துவீராக; பாவங்கள், அத்துமீறல்கள் ஆகியவற்றின் மாசுகளிலிருந்து என்னை முற்றிலும் தூய்மைப் படுத்துவீராக; என்னை ஓர் ஆன்மீக உள்ளத்தையும், மனசாட்சியையும் பெற்றிடச் செய்வீராக.

மெய்யாகவே,  எல்லா மனிதர்களாலும் உதவிக்காக நாடிடப்படுபவரான கருணைமிக்கவர் நீரே ஆவீர்; மெய்யாகவே, அதி தாராளமானவர் நீரே ஆவீர்.

-`Abdu'l-Bahá
-----------------------

ஆன்மீக வளர்ச்சி (#11254)

என் பிரபுவே! என் பிரபுவே! இது உமது  அன்பெனும் தீயால் ஏற்றப்பட்ட ஒரு விளக்காகும்; மற்றும் உமது கருணை எனும் விருட்சத்தினுள்  கொளுத்தப்பட்ட ஜூவாலையால் சுடர்வீசுகிறது.  என் பிரபுவே, உமது   திருவெளிப்பாடெனும் சைனாயின் மீது தூண்டப்பட்ட தீயைக்கொண்டு, அவனது எழுச்சி, வெப்பம் மற்றும் சுடர் ஆகியவற்றை அதிகரிப்பீராக.  மெய்யாகவே, உறுதிசெய்பவரும், உதவுபவரும், சக்திமிக்கவரும், தாராளமானவரும், அன்பானவரும் நீரே ஆவீர்.

-`Abdu'l-Bahá
-----------------------

ஆன்மீக வளர்ச்சி (#11255)

என் கடவுளே! என் கடவுளே! உமது இவ்வூழியன், உம்மை நோக்கி முன்னேறி வந்துள்ளான்; உமது அன்பெனும் பாலைவனத்தில் அலைந்து திரிகின்றான்; உமது சேவை எனும் பாதையில் நடந்து செல்கின்றான்; உமது ஆதரவை எதிர்ப்பார்க்கின்றான், உமது அருட்கொடையை நம்பி இருக்கின்றான்; உமது இராஜ்யத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளான்; உமது பரிசு என்னும் மதுரசத்தால் மதிமயங்கியுள்ளான். என் கடவுளே, உம்மீதுள்ள அவனது நேசம் எனும்  உணர்வெழுச்சியையும், உம்மைப் போற்றும் அவனது சீர்மையையும், உம்மீதான அவனது அன்பின் ஆர்வத்தையும் அதிகரிப்பீராக.  

மெய்யாகவே, அதி தாராளமானவரும், பொங்கிவழிந்திடும்  அருள்நிறை பிரபுவும் நீரே. மன்னிப்பவரும், கருணைமிக்கவருமான கடவுள், உம்மையன்றி வேறிலர்.

-`Abdu'l-Bahá
-----------------------

ஆன்மீக வளர்ச்சி (#11256)

கடவுளே, என் கடவுளே! உந்தன்பால்  ஈர்க்கப்பட்டு, உமது முன்னிலையை அணுகியுள்ள  இவன், உமது பிரகாசமிகு ஊழியனும், உமது ஆன்மீக அடிமையும் ஆவான்.  அதி வள்ளன்மைமிக்கப் பிரபுவே, இவன் உமது வதனத்தை நோக்கித் திரும்பியுள்ளான், உமது  ஒருமையை அங்கீகரித்தும், உமது  தனித்துவத்தை ஒப்புக்கொண்டும், நாடுகளுக்கிடையே உமது  நாமத்தின் பேரில் குரல் எழுப்பிடும், உமது  கருணை எனும் வழிந்தோடும் நீர்களின்பால் மக்களை வழிநடத்தியுமுள்ளான்.  கேட்போருக்கு, உமது  அளவிடற்கரிய கிருபை எனும் மதுரசத்தினைப் பொங்கி வழிந்திடும் கிண்ணத்திலிருந்து பருகிடச் செய்துள்ளான்.

பிரபுவே, எல்லாச் சூழல்களிலும் அவனுக்கு உதவிடுவீராக; நன்கு பாதுகாக்கப்பட்ட உமது மர்மங்களை அவன்  கற்றுக்கொள்ளச் செய்திடு-வீராக; உமது மறைக்கப்பட்ட முத்துகளை அவன் மீது பொழிந்திடுவீராக. உமது தெய்வீக உதவி எனும் காற்றினால், கோட்டை உச்சிகளில் பறந்திடுகின்ற ஒரு பதாகையாக அவனை ஆக்கிடுவீராக; தெளிவான நீருடைய ஓர் ஊற்றாக அவனை ஆக்கிடுவீராக.

மன்னித்தருளும் என் பிரபுவே! எங்கும்  ஒளிவீசிடும் ஒரு விளக்கின் கதிர்களைக் கொண்டு உள்ளங்களை ஒளிர்ந்திடச் செய்து, நீர்    தாராளமாகச் சலுகை வழங்கியுள்ள  உமது  மக்கள் மத்தியில்,  யாவற்றின் மெய்ம்மைகளையும் வெளிப்படுத்து-வீராக.

மெய்யாகவே, வலிமைமிக்கவரும், சக்தி-மிக்கவரும், பாதுகாப்பவரும், பலமானவரும், கொடையாளரும் நீரே ஆவீர்! மெய்யாகவே, கருணையனைத்திற்கும் பிரபு நீரே ஆவீர்!

-`Abdu'l-Bahá
-----------------------

ஆன்மீக வளர்ச்சி (#11257)

கடவுளே, என் கடவுளே! இவர்கள் உமது  வலுவற்ற ஊழியர்கள்; உமது  மேன்மைமிகு சொற்களுக்குச் சிரந்தாழ்த்தி,  உமது ஒளி எனும் திருவாசலில் தங்களையே தாழ்த்திக் கொண்டும்,  எதன்  மூலமாக  நண்பகல்  பேரொளியில் பகலவன் பிரகாசிக்கச் செய்யப்பட்டுள்ளதோ, அந்த உமது  ஒருமைக்குச் சாட்சியமளித்திடும் உந்தன்  விசுவாசமிக்க அடிமைகளும், பணிப்பெண்களும் ஆவர். நீர் உமது மறைவான இராஜ்யத்திலிருந்து  வெளிப்படுத்திய ஆணைகளுக்கு இவர்கள் செவிசாய்த்தும், அன்பினாலும் பரவசத்தாலும் துடிப்புறும்  இதயங்களுடன், அவர்கள் உமது    அழைப்புக்கு  மறுமொழியளித்துள்ளனர்.

பிரபுவே, உமது கருணைமிகு பொழிவுகள் அனைத்தையும் அவர்கள் மீது பொழிவீராக; உமது  கிருபை எனும் நீர்கள் அனைத்தையும் அவர்கள் மீது பொழிந்திடச் செய்திடுவீராக. 

சுவர்க்கம் எனும் தோட்டத்தில் அழகிய செடிகளாக அவர்களை வளரச்செய்திடுவீராக; உமது வழங்குதல் எனும்  முழுமையாக, நிறைந்து வழிந்திடும் மேகங்களிலிருந்தும், உமது தாராள கிருபை எனும் ஆழமான குளங்களிலிருந்தும், இத்தோட்டத்தை மலர்ந்திடச் செய்வதோடு,  அதை என்றும் பசுமையாகவும், செழிப்பாகவும், என்றும் புதிதாகவும், பளபளப்பாகவும், அழகாகவும் ஆக்கிடுவீராக.

மெய்யாகவே, வலிமையானவரும், மேன்மை-மிக்கவரும், சக்தியுடையவரும் நீரே ஆவீர்; விண்ணிலும் மண்ணிலும் மாறாது நிலைத்திருக்கும், தனியொருவர் நீரே. வெளிப்-படையான சான்றுகளுக்கும், அடையாளங்-களுக்கும்  பிரபுவான உம்மையன்றி வேறு கடவுள் இலர்.

-`Abdu'l-Bahá
-----------------------

ஆன்மீக வளர்ச்சி (#11258)

அவரே கடவுள்! கடவுளே, என் கடவுளே! இவர்கள், உமது   நாள்களில், உந்தன் புனிதத்தன்மை எனும் நறுமணங்களினால் ஈர்க்கப்பட்டும், உமது புனித விருட்சத்தில் எரியும் தீச்சுடரால் தூண்டப்பட்டும், உமது குரலுக்குச் செவிசாய்த்தும், உமது  போற்றுதலை உச்சரித்தும், உமது தென்றலால் விழிப்பூட்டப்பட்டும், உமது இனிய நறுமணங்களினால் கிளர்வுற்றும், உமது  அடையாளங்களைக் கண்ணுற்றும், உமது வசனங்களைப் புரிந்துகொண்டும், உமது வார்த்தைகளுக்குச் செவிசாய்த்தும், உமது வெளிப்பாட்டில் நம்பிக்கை வைத்தும், உமது   அன்புக் கருணையில் நம்பிக்கைக் கொண்டுமுள்ள உமது  ஊழியர்கள் ஆவர்.

பிரபுவே, பிரகாசமிகு பேரொளி எனும்  உமது   இராஜ்யத்தின்பால் அவர்களின் கண்கள் பதிந்துள்ளன; உயர்விலுள்ள உமது  இராஜ்யத்தின்பால் அவர்களின் முகங்கள் திரும்பியுள்ளன; உமது பிரகாசமும் பேரொளியும் மிக்க அழகின் மீதான அன்பினால் அவர்களின் இதயங்கள் துடிக்கின்றன; உமது அன்பெனும் நெருப்பிற்கு அவர்களின் ஆன்மாக்கள் இரையாகிவிட்டன; இவ்வுலகு, மறுவுலகு ஆகியவற்றின் பிரபுவே, உம்மீதுள்ள ஏக்கம் எனும் ஆவலினால் அவர்களின் வாழ்க்கைகள் கொதிக்கின்றன; உமக்காகவே அவர்களின் கண்ணீர் வழிந்திடுகின்றன.

உமது காவல், பாதுகாப்பு எனும் வலுமிக்க அரணுள்  அவர்களைக் காத்தருள்வீராக; உமது விழிப்புமிகு கவனத்தின் கீழ் அவர்களைக் கண்காணித்திடுவீராக; உமது வள்ளன்மை, இரக்கம் எனும் கண்களைக் கொண்டு அவர்களை கண்ணுற்றிடுவீராக; எல்லாப் பிரதேசங்களிலும் வெளிப்படையாகக் காணப்படும், உமது தெய்வீக ஒருமையின் அடையாளங்களாக அவர்களை ஆக்கிடுவீராக; உமது பிரம்மாண்ட மாளிகைகளின்மேல் பறந்திடுகின்ற உந்தன்  வலிமையின் விருதுகொடிகளாக அவர்களை ஆக்கிடுவீராக; உமது வழிகாட்டல் எனும் வான்  கோளங்களில்  விவேகம் எனும் எண்ணெயைக் கொண்டு எரியும் பிரகாசமான விளக்குகளாக அவர்களை ஆக்கிடுவீராக; உமது அடைக்கலமளிக்கும் சுவர்க்கத்தின் அதி உச்சத்திலுள்ள, மரக்கிளைகளின் மீது பாடிடும் உமது   அறிவெனும் தோட்டத்தின் பறவைகளாகவும், முடிவில்லா ஆழங்களில் உமது  அதிவிழுமிய கருணையின் பேரில் பாய்ந்திடும் உமது வள்ளன்மை எனும் சமுத்திரத்தின் பெரும்-விலங்குகளாகவும் அவர்களை ஆக்கிடுவீராக.

பிரபுவே, எனதாண்டவரே!  உமது  ஊழியர்களான இவர்கள் தாழ்ந்தவர்கள், உயர்விலுள்ள உமது  இராஜ்யத்தில் அவர்களை மேன்மைப்-படுத்திடுவீராக; இவர்கள் வலுவிழந்தவர்கள்,  உமது விழுமிய ஆற்றலினால் அவர்களை வலுப்படுத்திடுவீராக; இவர்கள் தாழ்த்தப்-பட்டவர்கள், அதி உயர்விலுள்ள உமது  இராஜ்யத்தில் உமது பேரொளியை அவர்களுக்கு வழங்கிடுவீராக; இவர்கள் ஏழைகள், உமது  மாபெரும் இராஜ்யத்தில் அவர்களைச் செல்வந்தர்களாக ஆக்கிடுவீராக. உயிரினங்கள் அனைத்தின் பிரபுவானவரே! ஆதலால், உமது  உலகங்களில் நீர் விதித்துள்ள, கண்களுக்குப் புலனாகும், புலானாகா  நன்மைகள் அனைத்தையும் அவர்களுக்கு வழங்கிடுவீராக; இம்மண்ணுலகில் அவர்களைச் செழுமையுறச் செய்திடுவீராக; உமது  அகத்தூண்டலைக் கொண்டு அவர்களின் உள்ளங்களை மகிழ்வுறச் செய்திடுவீராக; உமது  சர்வபேரொளிமிக்க ஸ்தானத்திலிருந்து பரவிடும், உமது நற்செய்தியினால் அவர்களின் உள்ளங்களை ஒளிபெறச் செய்திடுவீராக; உமது  அதி பெரும் ஒப்பந்தத்தில் அவர்களை உறுதிப்படுத்தி, உமது வள்ளன்மையினாலும், வாக்களிக்கப்பட்ட அருளினாலும் உமது  சாசனத்தில் அவர்களின் முயற்சிகளை வலுப்படுத்திடுவீராக; அருள்மிகு, இரக்கமிக்கவரே! நீரே அருளாளர், சர்வவள்ளன்மை மிக்கவர்.

-`Abdu'l-Bahá
-----------------------

ஆன்மீக வளர்ச்சி (#11259)

வழங்குபவரே! மேற்கிலுள்ள அன்பர்களின் மீதான  பரிசுத்த ஆவியின் இனிய நறுமணங்களை நீர் சுவாசித்துள்ளீர்; தெய்வீக வழிகாட்டல் எனும் ஒளியைக் கொண்டு, மேற்கின் வானத்தை நீர் ஒளிரச் செய்துள்ளீர். முன்பு தொலைவில் இருந்தவர்களை, நீர் உம்மை நெருங்கி அணுகிட செய்துள்ளீர்; அந்நியர்களை அன்பான நண்பர்களாக  நீர் ஆக்கியுள்ளீர்; உறங்கியோரை  நீர் விழிப்புறச் செய்துள்ளீர்; அலட்சியமானோரை  நீர் அக்கறைகொள்ளச் செய்துள்ளீர்.

வழங்குபவரே! இந்த உன்னதமான அன்பர்களை உமது  நல்விருப்பத்தை வென்றிட நீர் உதவிடுவீராக; அந்நியர், நண்பர் ஆகியவரின் நலனைச் சமமாகவே  விரும்புவோராக அவர்களை ஆக்கிடுவீராக. என்றென்றும் நிலைத்திருக்கவல்ல உலகுக்குள் அவர்களைக் கொண்டுவருவீராக; விண்ணுலகக் கிருபையிலிருந்து ஒரு பகுதியை அவர்களுக்கு வழங்கிடுவீராக; இறைவன்பால் நேர்மை மிகுந்த உண்மையான பஹாய்களாக அவர்களை ஆக்கிடுவீராக;  வெளித்தோற்ற சாயல்களிலிருந்து அவர்களைக் காப்பற்றி, உண்மையின் மீது அவர்களை உறுதியாக நிலைக்கச் செய்வீராக.  இறை இராஜ்யத்தின் அடையாளங்களும், சின்னங்களுமாக அவர்களை ஆக்கிடுவீராக; இந்த நரக வாழ்வின் தொடுவானங்களின் மேலிருந்து அவர்களை ஒளிரும் விண்மீன்களாக ஆக்கிடுவீராக. அவர்களை மனுக்குலத்தின் சுகமாகவும், ஆறுதலாகவும் ஆக்கிடுவீராக; உலக அமைதிக்கான ஊழியர்களாகவும் ஆக்கிடுவீராக. உமது ஆலோசனை எனும் மதுரசத்தைக் கொண்டு அவர்களை மதிமயங்கச் செய்வீராக; மேலும், உமது கட்டளைகள் எனும் பாதையில் அவர்கள் அனைவரும் அடியெடுத்து வைப்பதற்கு அருள்வீராக. 

வழங்கிடுபவரே! கிழக்கிலும் மேற்கிலுமுள்ள அன்பர்கள் நெருக்கமாகத் தழுவியிருப்பதைக் காண்பதும்; மனித சமுதாயத்தின் அங்கத்தினர்கள் அனைவரும், தனித்தனியான  துளிகள் ஒரு பெருங்கடலில் ஒன்று சேர்வது போன்று,  ஒரே மாபெரும் கூட்டத்தில் அன்பாகக் கூடியிருப்பதைக் கண்ணுறுவதும், ஒரே ரோஜா தோட்டத்திலுள்ள பறவைகளாக அவர்கள் அனைவரையும் கண்ணுறுவதும், ஒரே சமுத்திரத்தின் முத்துக்களாகவும், ஒரே மரத்தின் இலைகளாகவும், ஒரே கதிரவனின் ஒளிக்கதிர்களாகவும் கண்ணுறு-வதுமே, உமது   தலைவாசலில் பணிபுரியும்  இவ்வூழியனின் ஆழ்ந்த விருப்பமாகும். 

வல்லவரும், சக்திமிக்கவரும் நீரே  ஆவீர்; வலிமைமிகு கடவுளும், சர்வ சக்திமிக்கவரும், சகலத்தையும் கண்ணுறுபவரும் நீரே ஆவீர்.

-`Abdu'l-Bahá
-----------------------

